கேரளா ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டம்: முதலமைச்சரின் சதி என கவர்னர் குற்றசாட்டு
கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னை உடல் ரீதியாக காயப்படுத்த சதி செய்ததாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியுள்ளார். ஆளும் சிபிஐ(எம்)ன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) உறுப்பினர்களால் அவரது வாகனம் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை தொடர்ந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். புதுடெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு கவர்னர் சென்று கொண்டிருந்த போது நடந்த இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் ஆரிப், தனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளதாகவும், இது தற்செயலான சம்பவம் அல்ல, வேண்டுமென்றே தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட செயல் என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்பு குறைபாடு என ஆளுநர் குற்றசாட்டு
"முதலமைச்சர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தால், இந்த போராட்டக்காரர்கள் கார்கள் அங்கு அனுமதிக்கப்படுமா?, அவர்கள் (போலீசார்) யாரையும் முதலமைச்சரின் கார் அருகே வர அனுமதிப்பார்களா? இங்கே போராட்டக்காரர்களின் கார்கள் நின்று கொண்டிருந்தன, போலீசார் தள்ளி நின்றுகொண்டிருந்தார்கள். போராட்டக்காரர்கள், தங்கள் கார்களில் தப்பி ஓடிவிட்டனர்" என்று ஆளுநர் கூறினார். "எனவே, என்னை உடல்ரீதியாக காயப்படுத்த சதி செய்து இவர்களை அனுப்புவது முதல்வர் தான், என நான் திட்டவட்டமாக சொல்கிறேன். திருவனந்தபுரத்தின் சாலைகளை முழுவதும் 'குண்டர்கள்' கட்டுப்பாட்டில் உள்ளது" என ஆளுநர் ஆரிப் முகமது கான் மேலும் கூறினார். காவல்துறையின் கூற்றுப்படி, ஆளுநரின் வாகனம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் SFI செயல்பாட்டாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. அது தொடர்பாக மாணவர் அமைப்பைச் சேர்ந்த 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.