கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி
கேரள மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையை பத்ம லட்சுமி என்பவர் பெற்றுள்ளார். மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் பி ராஜீவ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வழக்கறிஞரின் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று(மார் 19) இந்திய பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 1,500க்கும் மேற்பட்ட சட்டப் பட்டதாரிகள் சேர்க்கை சான்றிதழை பெற்றனர். அதில் பத்ம லட்சுமியும் ஒருவராவார். பத்ம லட்சுமி, எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். "பத்ம லட்சுமியின் வாழ்க்கை திருநங்கைகள் பலரை வக்கீல் பணிகளில் ஈடுபட ஊக்குவிக்கட்டும்." என்று அமைச்சர் பி ராஜீவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் மூன்று திருநங்கை நீதிபதிகள்
திருநர்களுக்கு ஆதரவளிக்காத ஒரு சமூகத்தில் தனக்கென ஒரு பாதையை தானே உருவாக்கிக்கொண்ட இளம் வழக்கறிஞரின் முயற்சிகளை அமைச்சர் ராஜீவ் பாராட்டினார். இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியான ஜோயிதா மோண்டலுக்குப் பிறகு பத்ம லட்சுமியின் சாதனைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஜோயிதா மோண்டல், 2017ல் மேற்கு வங்கத்தில் உள்ள இஸ்லாம்பூர் லோக் அதாலத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நாக்பூரில் நடைபெற்ற லோக் அதாலத்தில் திருநங்கை ஆர்வலர் வித்யா காம்ப்ளே உறுப்பினர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், குவாஹாட்டியைச் சேர்ந்த ஸ்வாதி பிதான் பருவா என்ற மூன்றாவது திருநங்கை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் .