கேரளா மாநிலத்தில் பெண் எஸ்.ஐ.அதிரடி கைது
கேரளா மாநிலம் மலப்புரம் அருகே அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி 2 பெண்களை ஏமாற்றி 93 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் எஸ்.ஐ.'யை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளார்கள். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தவனூர் பகுதியினை சேர்ந்தவர் ஆர்ய(47). இவர் அங்குள்ள வளாஞ்சேரி காவல் நிலையத்தில் எஸ்ஐ-ஆக பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடன் படித்த திருச்சூர் பழையனூர் பகுதியினை சேர்ந்த ஓர் பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் தனக்கு பணம் தந்தால் ஒரே வருடத்தில் அதற்கு கூடுதல் வட்டியும், லாபமும் தருவதாக கூறியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
அதனை நம்பி அந்த பெண்ணும் பல தவணைகளாக கிட்டத்தட்ட 93 பவுன் நகைகளையும், ரூ.1.5 லட்சம் பணத்தையும் ஆர்யயிடம் கொடுத்துள்ளார். இதே போல் பாலக்காடு அருகே ஒற்றப்பாலம் பகுதியினை சேர்ந்த ஒரு பெண்ணிடமும் ரூ.7.5 லட்சம் ஆர்ய வாங்கி உள்ளார். ஆனால் பல வருடங்கள் ஆகியும் அந்த பணத்திற்கான லாபத்தையோ, வட்டியையோ அவர்களுக்கு கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து அந்த பெண்கள் ஒற்றப்பாலம் காவல் நிலையத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்துள்ளார்கள். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையினை தொடர்ந்து ஆர்ய கைது செய்யப்பட்டுள்ளதோடு, பணியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.