ரயில் டிக்கெட் ரீஃபண்டில் 1 ரூபாய் குறைவு: IRCTC-க்கு ரூ. 3,100 அபராதம் விதித்த கேரளா நுகர்வோர் நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
ரயில் டிக்கெட் ரத்து செய்த போது கணக்கீட்டில் ரூ. 1 குறைத்து ரீஃபண்ட் செய்த இந்திய ரயில்வே, பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.3,100 இழப்பீடாக வழங்க வேண்டும் என கேரள மாநில மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 20, 2024 அன்று பயணிக்க வேண்டிய 3-tier AC ரயில் டிக்கெட்டை ரூ.553 செலுத்தி பயணி ஒருவர் முன்பதிவு செய்திருந்தார். தனிப்பட்ட காரணங்களால் அந்த டிக்கெட்டை ஆகஸ்ட் 17, 2024 அன்றே அவர் ரத்து செய்தார். டிக்கெட் ரத்துக்கான கட்டணமாக ரூ.180 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக ரூ.9 கழித்துக் கொள்ளப்பட்டு, அவருக்கு ரூ. 341 ரீஃபண்டாக திரும்பக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், IRCTC நிறுவனம் அவருக்கு ரூ. 340 மட்டுமே திரும்ப வழங்கியது.
வழக்கு
பயணி தொடுத்த வழக்கு
ஒரு ரூபாய் குறைவாக வழங்கப்பட்டது குறித்துக் குழப்பமடைந்த பயணி, இது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், ஐஆர்சிடிசி சேவை குறைபாடு மற்றும் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி ரூ. 1 லட்சம் இழப்பீடு மற்றும் வழக்கு செலவு கோரி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
ஐஆர்சிடிசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பைக் கடந்ததால், அதனை நுகர்வோர் ஆணையம் நிராகரித்தது.
மேலும் 1 ரூபாய் குறைக்கப்பட்டதற்கான முறையான விளக்கத்தை ஐஆர்சிடிசி அளிக்கத் தவறியது.
தீர்ப்பு
நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், "ஒரு ரூபாய் என்பது சிறிய தொகையாக இருந்தாலும் நுகர்வோர் உரிமையில் அது மிக முக்கியமானது" எனச் சுட்டிக்காட்டியதுடன், இது சேவைக் குறைபாடு மற்றும் நேர்மையற்ற வர்த்தக நடைமுறை எனக் கண்டித்தது.
நுகர்வோர் ஆணையம் தனது தீர்ப்பில், நிலுவையில் உள்ள ரூ. 1-ஐ 9% வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும், பயணிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ரூ. 100 இழப்பீடாக வழங்க வேண்டும், வழக்கிற்கான கட்டணமாக ரூ. 3,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
மொத்தம் ரூ. 3,100 தொகையை, உத்தரவு கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் ஐஆர்சிடிசி வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.