'கேரளம்' ஆகிறது கேரளா: மாநிலத்தின் பெயரை மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
கேரள சட்டமன்றம் இன்று மாநிலத்தின் பெயரை 'கேரளா' என்பதில் இருந்து 'கேரளம்' என்று மாற்றுவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை முன்மொழிந்து ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. முதல்வர் பினராயி விஜயன் முன்மொழிந்த இந்த தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவை செயல்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே தீர்மானம் கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களால் மத்திய அரசு அதை திருப்பி அனுப்பியது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அரோசனையை பின்பற்றிய கேரள அரசு
இந்நிலையில், கேரள சட்டமன்றம் அதே தீர்மானத்தை மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. கடந்த வருடம், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள பெயர்களை 'கேரளம்' என்று திருத்த கேரள அரசு முயன்றது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம், முதல் அட்டவணையை மட்டும் திருத்துவதில் கவனம் செலுத்துமாறு கேரள அரசுக்கு ஆலோசனை வழங்கியது. இந்நிலையில், அதை பின்பற்றி, கேரள அரசு தற்போது ஆகஸ்ட் 9, 2023 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாற்றியமைத்துள்ளது . 'கேரளம்' என்பது அம்மாநிலத்தின் மலையாளப் பெயராகும். அப்படி இருந்தபோதிலும், அனைத்து அரசாங்க பதிவுகளிலும் 'கேரளா' என்று அதன் பெயர் தொடர்ந்து பதிவு செய்யப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.