காஷ்மீர் மக்கள் பிச்சை எடுப்பவர்கள் அல்ல: தேர்தல் தாமதம் குறித்து உமர் அப்துல்லா
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, சட்டமன்றத் தேர்தல் என்பது காஷ்மீர் மக்களின் உரிமை என்றும், அதற்காக மத்திய அரசிடம் பிச்சை எடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ரஜோரி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாகவும் அவர் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடத்த தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சூழலில் அப்துல்லா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஜூன் 2018 முதல், ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பில், கிட்டத்தட்ட 25 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உமர் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
"இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படாவிட்டால், அப்படியே ஆகட்டும். காஷ்மீரிகள் பிச்சைக்காரர்கள் அல்ல." என்று உமர் அப்துல்லாவின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக ANI ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. மேலும், "தேர்தல் எங்கள் உரிமை தான், ஆனால் அதற்காக அவர்களிடம்(மத்திய அரசு) கெஞ்ச மாட்டோம். அவர்கள் எங்களது தேர்தலை மீட்டெடுக்க விரும்புகிறார்கள் என்பது நல்லது தான். ஆனால் அவர்கள் அதை செய்ய விரும்பவில்லை என்றால், அப்படியே இருக்கட்டும்." என்றும் அவர் கூறி இருக்கிறார். "மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றாக தெரியும். ஆனால், அவர்கள் மக்களை 'தொல்லை செய்து' காயத்தை அதிகரிக்க விரும்புகிறார்கள்," என்று அவர் தெரிவித்திருக்கிறார்.