
முன்ஜாமீன் கோரி தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், நிர்மல் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தி முன்னோட்டம்
கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் தொடர்பாக என்.ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நிராகரிப்பு
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நிராகரிப்பு
முன்னதாக, இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் இந்தச் சம்பவம் குறித்துக் கடும் விமர்சனங்களை எழுப்பியதுடன், சம்பவம் நடந்த பிறகு விஜய் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காதது குறித்தும் கேள்வி எழுப்பியது. உயர் நீதிமன்றத்தால் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள என்.ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் இருவரும் தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். விடுமுறைகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், இருவரும் தங்கள் வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி அமர்வில் முறையிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.