
கரூர் விபத்தால் பின்னடைவு: தவெக உள்கட்டமைப்பை மாற்றியமைக்க விஜய் தீவிரம்?
செய்தி முன்னோட்டம்
கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக)மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கட்சி அணுகிய விதம் மற்றும் களத்தில் வலுவான உள்கட்டமைப்பு இல்லாதது போன்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், கட்சியின் நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றங்களைச் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னணி
கரூர் சம்பவமும், தவெக-வின் செயல்பாடும்
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாவட்ட வாரியான சுற்றுப்பயணத்தை திருச்சி மாவட்டத்தில் தொடங்கி விஜய் திட்டமிட்டிருந்தார். அதன்படி, செப்டம்பர் 27 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அவர் மேற்கொண்ட பயணத்தின்போதுதான் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. காவல்துறையினரால் கூட்டம் கட்டுப்படுத்தப்படாமல் போனது, விஜய் தாமதமாக கூட்டத்திற்கு வந்தது, அடிப்படையான கட்சி உள்கட்டமைப்பு இல்லாதது ஆகியவை இந்தத் தவறுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. சம்பவம் நடைபெற்று 10 நாட்களுக்கு மேலாகியும் கூட, விஜய் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்களும் கரூர் செல்லவில்லை. மாவட்ட அளவிலான நிர்வாகிகள்கூட ஒரு வாரத்திற்குப் பிறகுதான் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
விமர்சனங்கள்
TVK-க்கு எதிராக கிளம்பிய விமர்சனங்கள்; உள்கட்டமைப்பு மாற்றத்திற்கு திட்டமிடும் விஜய்
இந்த சம்பவம், வலுவான இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் கள அரசியல் அனுபவம் கொண்ட மாவட்ட நிர்வாகிகள் இல்லாததே பிரதான காரணம் என இந்திய அரசியல் வரலாற்றிலேயே இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றதில்லை எனக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போதுள்ள இரண்டாம் கட்ட நிர்வாகிகளிடம் இனிமேல் முழுமையாக நம்பிக்கை வைக்க முடியாது என்ற முடிவுக்கு விஜய் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய தேர்தல் வியூக வகுப்பாளர்கள் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்களின் ஆலோசனைகள் பெரியளவில் கைகொடுக்காத நிலையில், கட்சியில் மாற்றங்களை கொண்டுவர அவர் திட்டமிட்டுள்ளார்.
தகவல்
இரண்டாம் கட்ட தலைவர்களை மாற்ற திட்டமா?
தன் நம்பிக்கைக்குரிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களை நேரடியாக கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களாக நியமிக்க விஜய் ஆலோசித்து வருகிறாராம். இதன் மூலம், தனது விசுவாசமான வட்டத்தை அரசியலில் முன்னிறுத்த அவர் முடிவெடுத்துள்ளார். தற்போது வரை, கட்சி சார்பாக விஜய் முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தால், ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா, நிர்மல் ஆகியோருடன் ஆலோசனை செய்தே எடுப்பார். ஆனால், கட்சியின் உள்கட்டமைப்பு மாற்றம் குறித்து அவர் யாரிடமும் ஆலோசனை செய்யாமல், தானாகவே இந்த மாற்றங்களைக் கையாளத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த நிர்வாக மாற்றம் தவெக-வின் களப்பணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?