LOADING...
கரூர் விபத்தை விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

கரூர் விபத்தை விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 03, 2025
04:35 pm

செய்தி முன்னோட்டம்

கரூரில் விஜய் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் ஒரு சாதாரண விபத்து அல்ல என்றும், உண்மைகளை முழுமையாகக் கண்டறிய தனிப்பட்ட விசாரணை அவசியம் என்றும் கூறி, வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. வடக்கு மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி நிலை அதிகாரிகள், சிபிசிஐடி நிபுணர்கள் மற்றும் சான்றுகள் சேகரிப்பில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

எஸ்ஐடி விசாரணை

எஸ்ஐடி விசாரணையின் நோக்கம்

இந்த எஸ்ஐடி விசாரணையின் முக்கிய அம்சங்களாக, பிரச்சாரக் கூட்டத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தனவா, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியவர்கள் யார், உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாக இருந்த நிர்வாகக் குறைபாடுகள் எவை மற்றும் தவெக தலைவர் விஜயின் பங்கு என்ன என்பது குறித்து ஆராயப்படும். விஜயை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சமூக மற்றும் அரசியல் தரப்பிலிருந்து எழுந்த அழுத்தத்தைத் தொடர்ந்தே நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமறைவாகி உள்ள நிலையில், அவரைக் கைது செய்யக் காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.