
தவெக பொதுச்செயலாளர் இன்று நள்ளிரவுக்குள் கைது செய்யப்படலாம் என தகவல்
செய்தி முன்னோட்டம்
கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் என்.ஆனந்தை திங்கட்கிழமை (செப்டம்பர் 29) நள்ளிரவுக்குள் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கடந்த சனிக்கிழமை நடந்த விஜயின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவத்துக்குப் பிறகு என்.ஆனந்த் மற்றும் மதியழகன் தலைமறைவாகி விட்டனர் எனக் கூறப்படுகிறது.
சிறப்பு படை
தீவிரமாக தேடி வரும் காவல்துறை
அவர்களை பிடிக்க கரூர் ஏ.டி.எஸ்.பி பிரேமானந்தன் தலைமையில் சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு என்.ஆனந்தை தேடி வலைவீசி வருகிறது. விசாரணையில், கூட்டத்தின் ஏற்பாடுகளை செய்த முக்கிய பொறுப்பாளர் என்.ஆனந்த் என்பதும், நிகழ்வுக்கு முன் வருகையாளர்களின் எண்ணிக்கையை காவல்துறையிடம் தெரிவித்து அனுமதி பெற்றவரும் அவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். காவல்துறை இன்று நள்ளிரவுக்குள் என்.ஆனந்தை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, கரூர் சோக நிகழ்வு குறித்து வதந்தி பரப்பிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.