தமிழக காங்கிரஸ் தலைவராக விரும்பும் கார்த்தி சிதம்பரம்
தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை தொகுதியின் எம்.பி.யான கார்த்திக் சிதம்பரம் தனது 53வது பிறந்தநாள் தினத்தினை நேற்று(நவ.,16) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள மானகிரி என்னும் பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் தனது கட்சி தொண்டர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "'இந்தியா' கூட்டணி, தமிழகத்தில் ஒற்றுமையாக உள்ளது. வரவிருக்கும் மக்களவை தேர்தலில், காங்கிரஸ்-திமுக கூட்டணி 30 தொகுதிகளிலும் உறுதியாக வெற்றிப்பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், 'பீகார், மஹாராஷ்டிரா மாநிலங்களில் கூட்டணியில் சில சிக்கல்கள் உள்ள நிலையில் 5 மாநில தேர்தல் முடிவடைந்த பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கூட்டணி உறுதி செய்யப்படும்' என்றும் கூறினார்.
'நாளைய முதல்வர் கார்த்திக் சிதம்பரம்' - சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்
மேலும் அவர், "ரெய்டு என்பது தேவையற்ற விஷயம். சட்டத்திற்கு விரோதமாக அதிகளவு சொத்து வைத்திருப்போருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை செய்யலாம்" என்றும், "ரெய்டு நடத்துவது என்பது ஊடங்களுக்காக நடத்தப்படும் ஒரு 'ஷோ'வாகவே பார்க்கப்படுகிறது" என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து தனக்கு பிசிசிஐ தலைவராக வாய்ப்பு ஏதும் இல்லை என்று கூறிய கார்த்திக் சிதம்பரம், "நான் விரும்பும் பதவி என்றால் அது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி தான். தமிழக காங்கிரஸ் தலைவராகவே விருப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அவரது பிறந்தநாளையொட்டி ஒட்டிய வாழ்த்து போஸ்டரில் 'நாளைய முதல்வர் கார்த்திக் சிதம்பரம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது, தற்போது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.