காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு
தமிழ்நாடு மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விடும் விவாகரம் குறித்து காவிரி ஒழுங்காற்று குழு கூட்டமானது நேற்று(செப்.,26) டெல்லியில் நடந்துள்ளது. இதில் தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த குழு, தமிழகத்திற்கு நாளை(செப்.,28) முதல் அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பெரும் அதிர்ச்சிக்குட்பட்டதாக தெரிவித்துள்ள, அம்மாநில முதல்வர் சித்தராமையா, காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் கூறியுள்ளார்.
தமிழகத்திக்கு திறந்து விட தண்ணீர் இருப்பு இல்லை - சித்தராமையா
இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், "காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நாங்கள் எங்கள் வழக்கறிஞர்களுடன் ஏற்கனவே பேசிவிட்டோம். அவர்கள் உச்சநீதிமன்றத்தினை நாடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், வழக்கறிஞர்களின் அறிவுரை படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, தமிழகத்திக்கு திறந்து விட கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருப்பு இல்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டமும் விரைவில் நடக்கவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் இதுகுறித்த உத்தரவுகளை அதிகாரபூர்வமாக கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.