ஊமை மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் தூக்கி வீசிய தாய்: கர்நாடகாவில் கொடூரம்
கர்நாடகாவின் உத்தர கன்னடாவில் 32 வயது பெண் ஒருவர் தனது ஆறு வயது மகனை முதலைகள் நிறைந்த கால்வாயில் வீசிய கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஹலமதி கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. சாவித்திரி என்ற அந்த பெண்ணும், அவரது கணவர் ரவிக்குமாரும்(36) தங்கள் மகன் வினோத்தின் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு தொடர்பாக அடிக்கடி சண்டையிட்டு இருக்கின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை நடந்த கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இரவு 9 மணியளவில் சாவித்திரி தனது ஊமை மகனை கால்வாயில் வீசியதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த கால்வாய் முதலைகள் நிறைந்த காளி நதியுடன் இணையும் ஒரு கால்வாயாகும்.
சிறுவனின் உடல் ஒரு முதலையின் தாடையில் இருந்து மீட்பு
வீசி எறியப்பட்ட சிறுவனை தேட போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் முயற்சிகள் சனிக்கிழமை இரவு இருளால் தடைபட்டன. சனிக்கிழமை இரவு வினோத்தின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை, தேடுதல் குழுவினர் குழந்தையின் உடலை ஒரு முதலையின் தாடையில் இருந்து மீட்டனர். அந்த முதலை சிறுவனின் வலது கையை ஓரளவு விழுங்கியது. அவனது உடலில் பலத்த காயங்கள் மற்றும் கடித்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து, ஒரு வீட்டில் உதவியாளராக பணிபுரியும் சிறுவனின் தாய் சாவித்ரி மற்றும் கொத்தனார் வேலை செய்யும் சிறுவனின் தந்தை ரவிக்குமார் ஆகியோர் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.