
கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள்
செய்தி முன்னோட்டம்
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜ.க. எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா.
இவர் கர்நாடகாவில் உள்ள சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட்(கேஎஸ்டிஎல்) தலைவராக உள்ளார்.
இவர் மகனான பிரசாந்த் மதல் அரசு அதிகாரி ஆவார். பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்காளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் மதல் விருபாக்சப்பா தலைவராக உள்ள சோப்பு நிறுவனத்தின் ரா மெட்டீரியல் டெண்டரினை குத்தகைதாரர் ஒருவர் எடுக்க முயன்றதாக தெரிகிறது.
இதற்கு லஞ்சமாக 81 லட்சம் கேட்டதாக கூறப்படும் நிலையில், குத்தகைதாரர் லஞ்சம் கொடுக்க விரும்பாததால் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளார். அந்த அதிகாரிகளின் வழிகாட்டல் படி, 40 லட்சத்தை அவர் வழங்கிய நிலையில், பாஜக எம்எல்ஏ மகன் பிரசாந்த் மதல் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
ரூ.7.70 கோடி பறிமுதல்
லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடியாக மேற்கொண்ட கைது நடவடிக்கை
அப்போது அங்கிருந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்து, 40 லட்ச பணத்தினையும் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து பிரசாந்த் மதல் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், கணக்கில் வராத ரூ.1.70 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூர் கிரிசென்ட் சாலையில் உள்ள மதல் விருபாக்சப்பாவின் அலுவலகத்திலும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் ரூ.7.70 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பிரசாந்த் மதல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.