மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: கடலுக்குச் செல்லத் தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அறிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கைக்குத் தென்மேற்கே வங்கக்கடலில் இந்தக் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி உள்ளது. அதனுடன் தொடர்புடைய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியும் தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால்
புதுச்சேரி அரசு தகவல்
இதன் காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை முதல் (நவம்பர் 16) மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்க்குமாறு புதுச்சேரி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தற்போது கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாகப் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எச்சரிக்கை மற்றும் தகவலானது மீன்பிடி உரிமையாளர்களுக்குச் சென்றடைவதை உறுதிசெய்யுமாறு மீனவ கிராமப் பஞ்சாயத்தார்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்தக் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.