LOADING...
தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை! கன்னியாகுமரியில் நீதிமன்றத்தை நாடும் திமுக வேட்பாளர் மகேஷ்!
கன்னியாகுமரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மகேஷ்

தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை! கன்னியாகுமரியில் நீதிமன்றத்தை நாடும் திமுக வேட்பாளர் மகேஷ்!

எழுதியவர் Vasuki
May 06, 2026
03:24 pm

செய்தி முன்னோட்டம்

கன்னியாகுமரிசட்டமன்றத் தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் முறையாக தபால் வாக்குகளை எண்ணாமல் வெற்றியை அறிவித்துள்ளதாகக் கூறி, திமுக வேட்பாளர் மகேஷ் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறார். 2026 கன்னியாகுமரி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 214 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் பலன் கிடைக்காததால், திமுக தலைமை ஒப்புதலுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர மகேஷ் திட்டமிட்டுள்ளார். இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் மாவட்ட அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நூலிழையில் வெற்றி

தேர்தல் முடிவும் குளறுபடி புகாரும்

வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களிடையே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசமே இருந்துள்ளது. திமுக வேட்பாளர் மகேஷ் 74,831 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 75,045 வாக்குகளும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மகேஷை விட தளவாய் சுந்தரம் வெறும் 214 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். வாக்கு எண்ணிக்கையின் போது சுமார் 8 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சரியாக வேலை செய்யவில்லை எனவும், அதில் குளறுபடிகள் நடந்ததாகவும் மகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

எண்ணப்படாத வாக்குகள்

823 தபால் வாக்குகள் நிராகரிப்பு

இந்தத் தேர்தலில் தபால் வாக்குகளைக் கையாண்ட விதம் குறித்து மகேஷ் எழுப்பியுள்ள முக்கியக் கேள்விகள் சுமார் 823 தபால் வாக்குகள் எண்ணப்படாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டுள்ளன. 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் தபால் வாக்குகளில் வரிசை எண்களை அதிகாரிகளே தவறாக மாற்றி எழுதியுள்ளதாக மகேஷ் கூறுகிறார். இது வாக்காளர்களின் தவறு அல்ல, தேர்தல் அதிகாரிகளின் தவறு என்பது அவரது வாதம். 823 வாக்குகளை எண்ண வேண்டும் என்றும், மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்றும் கடிதம் கொடுத்தும் அதிகாரிகள் அதற்கான அக்னாலெட்ஜ்மென்ட் (Acknowledgment) தர மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

நீதிமன்றத்தை நாடும் திமுக

சட்டப்பூர்வ நடவடிக்கை

ஒரு வழக்கறிஞராகத் தனக்குச் சட்ட நுணுக்கங்கள் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ள மகேஷ், 823 வாக்குகளை எண்ணாமல் விடுவது ஜனநாயக விரோதமானது எனத் தெரிவித்துள்ளார். தபால் வாக்குகளில் திமுக முன்னிலையில் இருந்ததால், அந்த வாக்குகளைச் சரியாக எண்ணினால் முடிவுகள் மாறும் என அவர் நம்புகிறார். இது குறித்துக் கழகத் தலைமையுடன் ஆலோசித்து விரைவில் வழக்குத் தொடர உள்ளதாக அவர் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் தவெக-வின் வெற்றி குறித்துப் பேசப்பட்டு வரும் வேளையில், கன்னியாகுமரியில் எழுந்துள்ள இந்தத் தேர்தல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement