கன்னியாகுமரியில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் பெனடிக்ட் கைது
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆண்டோ. இவர் பிலாங்காலை பகுதியில் உள்ள தேவயாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்தசில நாட்களாக இவர் பெண்களுடன் ஆபாசமாகயிருக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவிவந்துள்ளது. பாதிரியாரின் லீலைகள் என்னும் பெயரில் அந்த வீடியோக்கள், புகைப்படம், வாட்ஸ்-அப்'சாட்ஸ் ஆகியன பரவி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இவர் பணிபுரியும் தேவாலயங்களுக்கு வரும் பெண்களுக்கு ஆறுதல் கூறுவதுபோல் அவர்களை தொட்டு தடவிப்பேசி, அவர்களை மயக்கி, அவர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து அவர்களுக்கு பாலியல்தொல்லை கொடுத்துள்ளார். இதனிடையே ஆலந்தட்டுவிளையை சேர்ந்த பெண் இந்த பாதிரியார் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவருகிறார் என்றுகூறி அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகாரளித்துள்ளார்.
நாகர்கோவிலில் உள்ள பண்ணையார் வீட்டில் பதுங்கியிருந்த பாதிரியார்
இவரைதொடர்ந்து நர்சிங் மாணவி ஒருவரும் பாதிரியார் மீது புகாரளித்துள்ளார். தன்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பாதிரியாருக்கு தகவல் கிடைத்தநிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். பாதிரியார் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அவர்மீது பெண்களை இழிவுபடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தல், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் பிரிவு கூடுதல் எஸ்.பி.ராஜேந்திரன் உத்தரவிட்டதன் பேரில், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாதிரியாரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. அவர் கேரளா அல்லது பெங்களூரில் இருக்காமல் என தகவல்கள் கிடைத்தநிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணையினை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று(மார்ச்.,20) நாகர்கோவிலில் உள்ள தனக்கு சொந்தமான பண்ணையார் வீட்டில் பதுங்கியிருந்த பாதிரியார் பெனடிக்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.