காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவி மலையில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பட்டாசு ஆலையில் திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி பட்டாசு ஆலையில் பணியாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள். தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதன் மூலம் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் உரிமையாளரான சுதர்சனும்(31) பட்டாசு வெடித்து சிதறியதால் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
மேலும் இந்த வெடி விபத்து குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனை தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 7 பெண்கள் உட்பட 16 தொழிலாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து இந்த வெடி விபத்து குறித்த அறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோர் நேரில் சென்று விபத்து நடந்த இடத்தினை ஆய்வு செய்துள்ளனர்.