பேக்கரி கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் மூலப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிப்பு: கர்நாடகா அரசு எச்சரிக்கை
பெங்களூருவில் உள்ள பல பேக்கரிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 12 கேக் மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் இருப்பதாக கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனில் உடல் நலம் கருதி ரோடமைன்-பி உள்ளிட்ட செயற்கை உணவு வண்ணங்களைப் பயன்படுத்துவதற்கு கர்நாடகா தடை விதித்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவுரை வந்துள்ளது.
செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட பிரபல கேக் வகைகள்
விவரங்களின்படி, கர்நாடக அரசு பரிசோதித்த 235 கேக் மாதிரிகளில், 223 பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டது. எனினும், மீதமுள்ள 12 கேக் மாதிரிகளில் ஆபத்தான அளவு செயற்கை வண்ணம் இருந்தது. ரெட் வெல்வெட் மற்றும் பிளாக் ஃபாரஸ்ட் போன்ற பிரபலமான கேக் வகைகள், பெரும்பாலும் இந்த செயற்கை வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. அவை குறிப்பிடத்தக்க ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்துகின்றன என்று கர்நாடகாவின் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. செயற்கை நிறங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பது மட்டுமின்றி, மன மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.