
பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம்
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமை (மே 10) காலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பொதுமக்கள் பகுதிகளில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியதில் மூத்த அரசு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் நடைபெற்ற அதிகாரப்பூர்வ கூட்டத்தில் பங்கேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தப்பாவின் வீட்டை ஷெல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் தனது வருத்தத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர், ராஜ்குமார் தப்பாவை ஒரு அர்ப்பணிப்புள்ள அதிகாரி என்றும், அவரது மரணத்தை பயங்கரமான இழப்பு என்றும் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா இதேபோன்ற கருத்தை கூறி, இரங்கல் தெரிவித்தார்.
பதற்றம்
இந்தியா பாகிஸ்தான் பதற்றம்
தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்புகளுடன் தொடர்புடைய பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த ஷெல் தாக்குதல் நடந்துள்ளது.
25 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பாகிஸ்தானுக்கும் பொதுமக்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளைத் தவிர்த்து, தீவிரவாத முகாம்களை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தியது.
ஆனால், அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்த முயற்சிப்பதால், பதற்றம் உச்சக்கட்டத்தில் உள்ளது.