60 மாணவிகள் 17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகார்
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் கஸ்தூர்பா காந்தி உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்குள்ள விடுதியில் மாணவியருக்கு பழைய உணவு வழங்குவது, கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும் என சொல்வது, கடும் குளிர் என்றாலும் தரையில் படுக்க சொல்வது போன்ற குற்றச்சாட்டுகள் அங்குள்ள வார்டன் மீது கூறப்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் அதனை சகித்துக்கொள்ள முடியாத மாணவிகள் அந்த வார்டன் மீது புகார் அளிக்க முடிவு செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து பிளஸ் 1 படிக்கும் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென நேற்று முன்தினம் இரவு ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை - கல்வித்துறை அதிகாரி உறுதி
ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த அவர்கள், தங்கள் விடுதியில் நடக்கும் கொடுமைகள் குறித்து துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கிய இவர்களது பயணம் நேற்று காலை 7மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் சென்றடைந்துள்ளது. அங்கிருந்த துணை ஆணையர் அனன்யா மிட்டலை சந்தித்த மாணவிகள் தங்கள் விடுதி வார்டன் மீது புகார் அளித்தனர். இதனையடுத்து அவர் மாவட்ட கல்வி அதிகாரியை அழைத்து வார்டன் மீது உடனே உரியநடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இவரது உத்தரவின் பேரில், மாவட்ட கல்வி கண்காணிப்பாளர்(டிஸ்இ) அபய்குமார் ஷில் அங்கு உடனே வந்து மாணவிகளின் குறைகளை கேட்டறிந்துள்ளார். பின்னர், அவர் உரிய விசாரணை மேற்கொண்டு வார்டன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, மாணவிகளை வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்.