கடன் தொல்லை காரணமாக மனைவி, 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட நகை தொழிலாளி
ஆந்திரா-குண்டூர் மாவட்டத்தில் தெனாலி பகுதியினை சேர்ந்தவர் 42 வயதாகும் சிவராமக்கிருஷ்ணன். தங்கம் தயாரிப்பு தொழிலாளியான இவரது மனைவி மாதவி(38), இத்தம்பதியருக்கு வைஷ்ணவி(16), லட்சுமி(13) மற்றும் குசுமபிரியா(9)என 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சிவராமக்கிருஷ்ணனின் தொழில் சரிவர இல்லை என்பதால் குடும்பச்செலவுகளுக்கு இவர் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். அதற்கு வட்டி செலுத்த முடியாமல் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தோர் அடிக்கடி நேரில் வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்த நிலையில், சிவராமகிருஷ்ணன் தனது சொந்த ஊரைவிட்டு அனகாப்பள்ளி என்னும் பகுதியில் வாடகைவீடு ஒன்றிற்கு குடும்பத்தோடு சென்றுள்ளார். ஆனால் அங்கும் கடன் கொடுத்தோர் தேடிவர துவங்கியுள்ளனர். இதனால் மனவுளைச்சலுக்கு ஆளான சிவராமகிருஷ்ணன் தனது மனைவியிடம் நேற்றுமுன்தினம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.
வழக்குப்பதிவு செய்து விசாரணை துவக்கம்
அதற்கு அவரது மனைவி,'நாம் இறந்துவிட்டால் நமது மகள்கள் அனாதை ஆகிவிடுவார்கள்'என்றுக்கூறி சமாதானம் செய்துள்ளார். அதனை ஏற்காத சிவராமகிருஷ்ணன் நேற்று(டிச.,28)விஷம் வாங்கிவந்து அதனை யாருக்கும் தெரியாமல் உணவில் கலந்துள்ளார். விஷம் கலந்த உணவினை அனைவரும் சாப்பிடுவதை கண்டு கதறிய அவர், தானும் அந்த உணவை சாப்பிட்டுள்ளார். அடுத்த சிலமணிநேரத்திலேயே அனைவரும் மயங்கி, கணவன்-மனைவி மற்றும் மகள்கள் வைஷ்ணவி(16),லட்சுமி(13) உள்ளிட்டோர் அடுத்தடுத்து படுக்கையிலேயே உயிரிழந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ந்த குசுமபிரியா, அலறியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குசுமபிரியாவை மீட்டு அனகாபள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. தகவலறிந்து அங்குவந்த காவல்துறை சம்பவயிடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனை மேற்கொள்ள அனுப்பியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது.