மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடத்தை பிடித்து பா.ஜ.க., - நினைவுக்கூறும் வகையில் தங்கச்சிலை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத்தில் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் 182 இடங்களில் பா.ஜ.க., 156 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க.,வின் இந்த அமோக வெற்றியை நினைவுக்கூறும் வகையில் குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 156 கிராம் எடையுள்ள இந்திய பிரதமர் மோடியின் மார்பளவு சிலையை 18 காரட் தங்கத்தில் வடிவமைத்துள்ளார். இந்த சிலையை ராதிகா செயின்ஸ் நகை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பசந்த் போஹ்ரா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், பலரும் இச்சிலையை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. பலரும் விலைக்கு வாங்க நினைத்தாலும் இந்த சிலையை பசந்த் விற்க முடிவு செய்யவில்லை.
ரூ. 11 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் உருவாக்கப்பட்ட சிலை
இது குறித்து அவர் கூறுகையில், 'நான் நரேந்திர மோடியின் ரசிகன், அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன்' என்று கூறினார். மேலும், இந்த சிலையை செய்ய 20 கைவினை அறிஞர்கள் ஈடுப்பட்டார்கள் என்றும், இந்த மார்பளவு சிலையை உருவாக்க மூன்று மாத காலம் ஆனது என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த சிலையை செய்ய 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் உபயோகப்படுத்தப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போதைக்கு இச்சிலையை விற்கபோவதில்லை என்று கூறிய பசந்த், இதன் எடை 156 கிராமிற்கு சற்று அதிகமாக இருந்தது என்று கூறினார். பா.ஜ.க., 156 இடங்களில் வெற்றிபெற்றதால் உருவாக்கப்பட்ட சிலை இது என்பதால், அதன் எடையை குறைக்க கைவினை அறிஞர்கள் சில மாற்றங்களை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.