+2 மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க; ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வுத் தேதி வெளியீடு; முக்கிய விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடிகளில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு (Joint Entrance Examination Advanced) 2026 தேர்வுத் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி இந்தத் தேர்வு இரண்டு அமர்வுகளாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் நடைபெறும். கூடுதல் விபரங்கள் இங்கே:-
விவரங்கள்
தேர்வு மற்றும் தகுதி விவரங்கள்
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் இரண்டு கட்டாயத் தாள்கள் இருக்கும். ஒவ்வொரு தாள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியதாக, மூன்று மணி நேரம் நடைபெறும். சரியான பதிலுக்கு 3 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஜேஇஇ மெயின் 2026 தேர்வில் தகுதி பெறும் சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதி பெறுவார்கள். ஜேஇஇ மெயின் 2026 தேர்வு ஜனவரி 21 முதல் 30 வரையிலும், ஏப்ரல் 1 முதல் 10 வரையிலும் இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ளது.
அனுமதிச் சீட்டு
அறிவிப்பு மற்றும் அனுமதிச் சீட்டு
ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 க்கான பாடத்திட்டம், மதிப்பெண் திட்டம், பதிவு அட்டவணை மற்றும் தேர்வு நகரங்கள் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகள் (Admit Card) தேர்வு தேதிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு, அதாவது மே 13 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளமான jeeadv.ac.in இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தைக் கண்காணிக்கலாம்.