டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிரடியான புது விதிமுறைகள் அமல்
டெல்லியில் உள்ள பெரும் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமீப காலமாக தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது. மாணவர் சங்கங்களுக்கிடையே ஏற்படும் மோதல் அதிகமாகி கொண்டே போகிறது. இடதுசாரி மாணவ அமைப்பிற்கும், வலதுசாரி ஏபிவிபி அமைப்பிற்கும் இடையேயான கருத்து மோதல்கள் போராட்டத்தில் ஆரம்பித்து, தற்போது வன்முறையில் வந்து நிற்கிறது. இது கல்வியாளர்கள் மத்தியில் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஜேஎன்யூ மாணவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிமுறைகள் என்று கூறி 10 உத்தரவுகளை நிர்வாகம் பிறப்பித்துள்ளது. அதில், பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினால் ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
ஹாஸ்டல் அறைகளில் தவறான சொற்களை எழுதுவதும் குற்றமே
வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பது போன்ற அதிரடியான உத்தரவுகள் அதில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஹாஸ்டல் அறைகளில் தவறான, அவமானத்திற்குரிய சொற்களை எழுதுவது, வரைவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் தவறு, அதற்கும் தண்டனை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்கு விதிமுறையானது கடந்த பிப்ரவரி 3ம் தேதியில் இருந்தே அமலுக்கு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக குஜராத் கலவரம் குறித்த பிபிசி டாக்குமெண்டரி ஒலிபரப்புவது தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. அத்துடன் சத்திரபதி சிவாஜி பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாகவும் மோதல் ஏற்பட்டு, அதில் தமிழக மாணவர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.