டெல்லி வந்தடைந்தார் ஜப்பான் பிரதமர் சனாய் தகாஇச்சி; மோடியுடன் இன்று என்ன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன?
செய்தி முன்னோட்டம்
பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் பிரதமர் சனாய் தகாஇச்சி புதன்கிழமை மாலை புதுடெல்லி வந்தடைந்தார். ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் சென்று மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பேச்சுவார்த்தை
பிரதமர் மோடியுடன் இன்று உயர்மட்டப் பேச்சுவார்த்தை
ஜப்பான் பிரதமர் சனாய் தகாஇச்சி இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் 16-வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர கூட்டு உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பொருளாதாரப் பாதுகாப்புக்கான கூட்டுப் பிரகடனம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகவுள்ளன.
முக்கிய இலக்கு
செமிகண்டக்டர் மற்றும் பசுமை ஆற்றல் முக்கிய இலக்கு
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியில், செமிகண்டக்டர்கள், முக்கியக் தாதுக்கள், மேம்பட்ட பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சங்கிலிகளை மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் மாற்றுவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். குறிப்பாக, கப்பல் மற்றும் உரத் தொழில்களில் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக ஒடிசாவில் ஜப்பான் உதவியுடன் அமையவுள்ள பிரம்மாண்ட பசுமை அம்மோனியா ஆலைத் திட்டத்திற்கு ஜப்பான் தனது முழு ஆதரவை வழங்கவுள்ளது.
முதலீடு
67 பில்லியன் டாலர் முதலீடு மற்றும் இந்தோ-பசிபிக் வியூகம்
இன்று மதியம் 3 மணியளவில் தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் இந்தியா - ஜப்பான் கூட்டுப் பொருளாதார கருத்தரங்கில் சனாய் தகாஇச்சி உரையாற்றுகிறார். இதில் ஜப்பானின் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் (CEOs) பங்கேற்கின்றனர். கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் ஜப்பானில் உறுதியளிக்கப்பட்ட 10 டிரில்லியன் யென் (சுமார் 67 பில்லியன் டாலர்) முதலீட்டுத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த உச்சிமாநாடு வழிவகுக்கும். மேலும், சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையில் 'சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்' பிராந்தியத்தை உருவாக்குவதில் இந்தியாவை தங்களின் இன்றியமையாத பங்காளியாக ஜப்பான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.