'ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்; சட்டசபை தேர்தல் வெகு தொலைவில் இல்லை': பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்து விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றும், மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட்ட பிறகு சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "... ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும். நீங்கள் உங்கள் கனவுகளை எம்.எல்.ஏக்கள் மற்றும் உங்கள் அமைச்சர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்." என்று கூறியுள்ளார். மேலும், வரும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் போது பயங்கரவாதம், தாக்குதல், கல் வீச்சு மற்றும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு போன்ற அச்சங்கள் இருக்காது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
"ஜம்மு காஷ்மீர் மக்களின் நீண்டகால துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்": பிரதமர் மோடி
"தயவுசெய்து என்னை நம்புங்கள், கடந்த 60 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடுவோம். கடந்த 10 ஆண்டுகளில் நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதால் ஜம்மு-காஷ்மீர் முற்றிலும் மாறியுள்ளது " என்று அவர் கூறியுள்ளார். அந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் மக்களின் நீண்டகால துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்ற எனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன் என்றும் கூறியுள்ளார். மேலும், அரசியலமைப்பின் 370 வது பிரிவை மீண்டும் கொண்டு வருமாறு காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்கு அவர் சவால் விடுத்துள்ளார். உதம்பூர் மற்றும் ஜம்முவில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களான ஜிதேந்திர சிங் மற்றும் ஜுகல் கிஷோர் ஆகியோருக்கு வாக்களிக்கும் படி பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.