புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று(ஏப்ரல்.6) காலை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 600 காளைகள் அழைத்து வரப்பட்டது. அந்த காளைகளை பிடிக்க 225 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். இந்த போட்டியினை ஆர்ஓடி குழந்தைசாமி துவக்கி வைத்துள்ளார். ஊர்ஜவுளி எடுத்துவரப்பட்டு பாரம்பரிய முறைப்படி முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன் பின்னர் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்க களமிறங்கி முயற்சி செய்தனர். அதனை அங்கு கூடியிருந்த மக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
வெற்றி பெற்றோருக்கு வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல பரிசு பொருட்கள்
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் வீரர்களால் பிடிக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி காசு, பீரோ, கட்டில், டிவி, மின்விசிறி, மிக்சி போன்ற பல பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதே போல்புதுக்கோட்டை மாவட்டம் மாங்கனாம்பட்டியில் வீரகாளியம்மன் கோயில் திருவிழாவிலும் இன்று(ஏப்ரல்.,6) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் 650 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை ஆர்டிஓ முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து நேற்று(ஏப்ரல்.,5) புதுக்கோட்டை இலுப்பூரில் இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.