'வேலை நேரம் முடிந்துவிட்டது': 350 பயணிகளை பாதியிலேயே விட்டுச் சென்ற விமானிகள்
வானிலை காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா(ஏ-112) விமானத்தின் விமானிகள் திடீரென்று அந்த விமானத்தை ஓட்ட மறுத்ததால், அது 5 மணி நேரம் தாமதமானது. லண்டனில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா ஏ-112 விமானம், நேற்று அதிகாலை 4 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது. ஆனால், டெல்லி விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அந்த விமானத்தை ஜெய்ப்பூருக்கு திருப்பிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்ட அந்த விமானம், இரண்டு மணி நேரத்திற்குள் மீண்டும் புறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பயணிகள் சாலை வழியாக டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டனர்
ஆனால், ஏர் டிராஃபிக் கன்ட்ரோல்(ATC) மீண்டும் புறப்படுவதற்கு அனுமதியளித்த பிறகும், அந்த விமானத்தை ஒட்டி சென்ற விமானிகள், 'வேலை நேரம் முடிந்துட்டது' என்று கூறி விமானத்தையும் பயணிகளையும் அங்கேயே விட்டு சென்றனர். இதனால், டெல்லி செல்ல வேண்டிய 350 ஏர் இந்தியா பயணிகள் ஜெய்ப்பூரில் சிக்கித் தவித்தனர். மேலும், டெல்லியை சென்றடைய மாற்று வழிகளை தேட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கிடையில், ஏறக்குறைய இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, சில பயணிகளை சாலை வழியாக ஏர் இந்தியா நிறுவனம் டெல்லிக்கு அழைத்து சென்றது. பிற பயணிகள், மாற்று விமானிகள் வரும் வரை காத்திருந்த பின்னர் அதே விமானத்தில் டெல்லிக்கு சென்றனர்.