பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று(மார் 17) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, நிலுவையில் உள்ள நிதிகள், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் போன்ற ஆந்திர மாநில விவகாரங்கள் குறித்து விவாதித்தார். ஆந்திரப் பிரதேசம் பிரிந்து ஒன்பது ஆண்டுகள் ஆகியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையேயான பல இருதரப்புப் பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என்று முதல்வர் ஜெகன் ரெட்டி கூறினார். அதனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் அந்த மாநிலம் தன்னிறைவை பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், போலவரம் திட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் பேசிய அவர், நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் கோரினார்.
ஆந்திர மாநில வளர்ச்சிக்கான நிதிகளை கோரினார்
போலவரம் திட்டத்திற்காக தனது மாநிலம் ஏற்கனவே சுமார் 2,900 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், அதை மத்திய அரசு இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருக்கிறார். திட்டத்தை விரைந்து முடிக்க, தற்காலிக முறையில் ரூ.10,000 கோடி நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அவர் கேட்டு கொண்டார். 55,548.87 கோடி மதிப்பிலான போலவரம் திட்டத்தின் திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கு முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார். இது தவிர, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர் விவாதித்ததாகவும், மேலும் 12 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.