ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து; தீர்மானத்திற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளார். முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஆகஸ்ட் 5, 2019 அன்று, 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தபோது, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானத்திற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு மற்றும் சட்டப்பேரவைக் கூட்டம்
இந்த கூட்டத்தில் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். நவம்பர் 4ஆம் தேதி ஸ்ரீநகரில் சட்டப்பேரவையை கூட்டவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கூடுதலாக, அக்டோபர் 21 ஆம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்ய முபாரிக் குல் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை முன்மொழிந்துள்ளது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த தீர்மானத்தை சமர்ப்பிக்க அப்துல்லாவின் அரசு உத்தேசித்துள்ளது. இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் உள்ள பிற பிராந்திய கட்சிகள் தீர்மானம் மாநில அந்தஸ்தை மட்டுமே வலியுறுத்துவதாகவும், சட்டப்பிரிவு 370 அல்ல என்றும் கடுமையாக சாடியுள்ளன. மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), மக்கள் மாநாடு (பிசி) ஆகியவை ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.