ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக தொடரும் IT ரெய்டு
நேற்று தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய IT ரெய்டு, இன்று இரண்டாம் நாளாக தொடர்கிறது. சமீப ஆண்டுகளில் அபார வளர்ச்சி அடைந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான G Square-இன் பின்னால் இருப்பது ஆளும்கட்சிக்கு நெருங்கியவர்கள் என அண்ணாமலை குற்றச்சாட்டை வைத்தார். அதனை தொடர்ந்து, வருமான வரி ஏய்ப்பு நடந்ததாக, G Square நிறுவனத்திற்கு சொந்தமான கிட்டத்தட்ட 50 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. ஜி ஸ்கொயர் நிறுவனம், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்டு வருகிறது. சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, திருச்சி ஆகிய இடங்களில் மட்டுமின்றி, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவிலும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது . நேற்று ஒரே நேரத்தில், அங்கும், சோதனை நடைபெற்றது.
G Square நிர்வாக அதிகாரிகள் வீட்டிலும் தொடரும் சோதனை
G Square அலுவலகங்கள் மட்டுமின்றி, அந்நிறுவனத்தை இயக்குவதாக கூறப்படும், சுதிர், பிரவின்,பாலா, ஆதவ் அர்ஜூன், சட்டமன்ற உறுப்பினர் எம்.கே மோகனின் மகன் கார்த்திக் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அது இன்றும் தொடர்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன. ஆளும் கட்சியின் தலையீட்டால், CMDA உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில், விதிமுறைகள் மீறி அனுமதி பெறப்பட்டு, ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈடுட்டியதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் புகார் கூறப்பட்டதை அடுத்து, இந்த சோதனைகள் நடைபெறுவதாக செய்திகள் கூறுகின்றன