சந்திரயான்-3 ஏவுகணையின் பின்னணியில் குரல் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுன்களுக்கு குரல் கொடுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன(இஸ்ரோ) விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் கடைசியாக சந்திரயான் 3 ஏவுகணையின் கவுண்ட்டவுனுக்கு குரல் கொடுத்தார். சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 23ம் நாள் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3யை தரையிறக்கியதன் மூலம், நிலவின் தென்துருவப் பகுதியில் முதன் முதலில் விண்கலத்தை தரையிறக்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டிருக்கும் விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்துருவப் பகுதியின் மேற்பரப்பில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தன.
14 நாட்கள் கழித்து மீண்டும் இயங்குமா சந்திரயான்-3 கருவிகள்?
தற்போது, லேண்டரும், ரோவரும் தூங்க வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 14 நாட்களில் அது மீண்டும் இயக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் ஒரு இரவு கழிவது என்பது பூமியின் நேரப்படி 14-நாட்களாகும். நிலவில் இரவு நேரங்களில் அதிக குளிர் அடிக்கும் என்பதாலும் சூரிய ஒளி இல்லாமல் ஆராய்ச்சி நடத்த முடியாது என்பதாலும் லேண்டரும், ரோவரும் தூங்க வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தக் கடும் குளிரில் லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் பழுதடைவற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, இன்னும் 14 நாட்கள் கழித்து அந்த கருவிகளால் இயங்க முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தாலும், இஸ்ரோ விஞ்ஞானிகள் அது மீண்டும் இயக்கப்படும் என்றும் அப்படி இயக்கப்படாவிட்டாலும் அது இந்தியாவின் தூதராக நிலவில் என்றென்றும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.