UPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் வெளியீடு: முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள்
2022 ஆம் ஆண்டுக்கான இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகளை இன்று(மே 23) யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) அறிவித்தது. இந்த முறை, இஷிதா கிஷோர் என்பவர் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடம் பிடித்துள்ளார். கரிமா லோஹியா என்பவர் இரண்டாவது இடத்தையும், உமா ஹரதி என்பவர் மூன்றாவது இடத்தையும், ஸ்மிருதி மிஸ்ரா என்பவர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த வருடம் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதல் 4 இடத்தையும் பெண்கள் பிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தில் பட்டதாரியான இஷிதா கிஷோர், டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஆவார்.
முதல் 25 இடங்களை 14 பெண்களும் 11 ஆண்களும் பிடித்துள்ளனர்
கரிமா லோஹியா மற்றும் ஸ்மிருதி மிஸ்ரா ஆகியோர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் ஆவர். உமா ஹரதி ஐஐடி-ஹைதராபாத்தில் பி.டெக் பட்டம் பெற்றிருக்கிறார். சென்ற ஆண்டு வெளியான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளிலும் பெண்கள் தான் முதல் மூன்று இடங்களை பிடித்திருந்தனர். 2021 சிவில் சர்வீசஸ் தேர்வில் ஸ்ருதி சர்மா, அங்கிதா அகர்வால் மற்றும் காமினி சிங்லா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்திருந்தனர். இன்று வெளியான தேர்வு முடிவுகளில், 933 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 613 பேர் ஆண்கள் மற்றும் 320 பேர் பெண்கள் ஆவர். முதல் 25 இடங்களை 14 பெண்களும் 11 ஆண்களும் பிடித்துள்ளனர்.