
டெபாசிட் செய்யப்படும் 2000 ரூபாய் நோட்டுக்கள்.. அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள்!
செய்தி முன்னோட்டம்
ரிசர்வ் வங்கி கடந்த மாதம் 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
2016-ல் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட குழப்பத்தைப் போல தற்போதும் மக்களிடம் பணத்தை மாற்றுவதற்கு முன் நிலையிலாத்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பெரும் கூச்சல் குழப்பமின்றி, 2000 ரூபாய் நோட்டை மாற்றும் செயல்முறை எளிதாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ரூபாய் நோட்டுக்களை மாற்ற 4 மாத காலம் அவகாசம் கொடுத்திருந்த போதிலும், கடந்த 20 நாட்களிலேயே 50% நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.
இன்னும் சொல்லப் போனால், மக்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதை விட, 85% மக்கள் அதனை வங்கிகளில் டெபாசிட் செய்து விட்டே செல்வதாகக் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.
இந்தியா
அதிகரிக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை:
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றும் செயல்முறை எளிதாக நடைபெறுவதற்கு இந்திய மக்களிடையே அதிகரித்திருக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையும் ஒரு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம் தொடங்கி, ரயில் கட்டம் வரை பெரும்பாலான இடங்களில் டிஜிட்டலாகவே கட்டணம் செலுத்த முடிகிற நிலையில், ரூபாய் நோட்டுக்களின் தேவை மக்களிடம் குறைந்திருக்கிறது.
கடந்த மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் யுபிஐ மூலம் 9.41 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது கடந்த ஏப்ரலை விட 6%-மும், கடந்தாண்டு மே மாதத்தை விட 58%-மும் அதிகம்.
உலகிலேயே நிகழ் நேரத்தில் அதிக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. மேலும், உலகின் பல நாடுகள் யுபிஐ தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.