பிபிசி வருமான வரியை சரியாக கட்டவில்லை: வருமான வரித்துறை
மூன்று நாள் நடைபெற்ற வருமான வரி ஆய்வின் மூலம் பிபிசியின் கணக்குப் புத்தகங்களில் முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளதாக இந்திய வருமான வரித்துறை கூறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002இல் நடந்த குஜராத் கலவரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடந்ததால், இதை ஒரு பழிவாங்கும் செயல் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி இருந்தனர். இந்நிலையில், பிபிசி ஆவணங்களை ஆராய்ந்த வருமான வரித்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் பிபிசி என்ற பெயர் எங்குமே குறிப்பிடப்படவில்லை.
வருமான வரித்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் பல்வேறு மொழிகளில் இயங்கும் அந்த ஒளிபரப்பு நிறுவனம் அதன் வருமானத்தை சரியாக கணக்கு காட்டவில்லை. வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ள தொகைகளுக்கும் கணக்கு காட்டப்படவில்லை. 3 நாட்கள் நடந்த சோதனையின் மூலம் பல்வேறு பிரிவுகளில் அந்த நிறுவனம் வரி செலுத்தப்படாதது தெரியவந்துள்ளது. டிவி, ரேடியோ மற்றும் டிஜிட்டல் மீடியம் மூலம் இயங்கி வரும் அந்த நிறுவனத்தின் வருவாயை கணக்கிடுவதில் முறைகேடு நடந்துள்ளது. ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் வருவாய் ஒத்துப்போகவில்லை. வரி செலுத்துவதில் முறைகேடு நடந்துள்ளது. என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பிபிசி ஊழியர்கள் விசாரணையை தாமதப்படுத்த முயற்சித்ததாகவும் வருமான வரித்துறை குற்றம்சாட்டியுள்ளது.