ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு: இந்தியாவில் இருந்து செல்லும் முக்கிய அரசியல் தலைவர்கள் யார்?
செய்தி முன்னோட்டம்
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஜூலை 4 முதல் 9 ஆம் தேதி வரை ஈரானில் நடைபெற உள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட கமேனியின் இந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இறுதி ஊர்வல நிகழ்வில் பங்கேற்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கான பயணக் கடமைகள் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
பங்கேற்பு
இறுதி சடங்கில் பங்கேற்கவுள்ள தலைவர்கள்
இந்திய அரசின் சார்பில், பீகார் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அடா ஹஸ்னைன் (ஓய்வு) மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் அடங்கிய அதிகாரப்பூர்வ குழு ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் பவன் கேரா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கேவால் நேரடியாக செல்ல முடியாத நிலையில், கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக பிரதிநிதித்துவப்படுத்த சல்மான் குர்ஷித் சிறப்பு விமானம் மூலம் ஈரான் செல்கிறார்.
மதகுருமார்கள்
மெகபூபா முஃப்தி மற்றும் காஷ்மீர் ஷியா மதகுருமார்கள் பங்கேற்பு
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி (PDP) கட்சியின் தலைவருமான மெகபூபா முஃப்திக்கு ஈரானின் சர்வதேச உறவுகள் துறை சார்பில் அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வரலாற்று வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, கமேனிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தாம் ஈரான் செல்லவிருப்பதாக மெகபூபா முஃப்தி உறுதிப்படுத்தியுள்ளார். இவருடன் சேர்த்து, தேசிய மாநாட்டுக் கட்சி (NC) எம்பி ஆகா சையத் ருஹுல்லா, இம்ரான் அன்சாரி உள்ளிட்ட 5 முக்கிய காஷ்மீரி ஷியா மதகுருமார்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், உலக அமைதித் தூதரும் சமணத் துறவியுமான ஆச்சார்யா லோகேஷ் முனிக்கும் இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்க ஈரான் அழைப்பு அனுப்பியுள்ளது.