அமெரிக்க - ஈரான் போருக்கு இடையே டெல்லி BRICS மாநாட்டிற்கு வரும் ஈரானிய அதிபர் பெசெஷ்கியான்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் வரும் செப்டம்பர் 12-13 தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் புதுடெல்லி வரவுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானிய அதிபரின் இந்த இந்திய வருகை உலகளவில் பெரும் ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தலைமையில் புதுடெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
இருதரப்பு ஆலோசனை
பிரிக்ஸ் மாநாடும் இருதரப்பு ஆலோசனையும்
இச்சந்திப்பின் போது, பிராந்தியப் போர் பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் தூதரக வழியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய உதவும் சபாஹார் துறைமுகத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்படும்.
ஹார்முஸ் நீரிணை, மற்றும் இந்தியாவின் கச்சா எண்ணெய் பயன்பாடு, கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்தல் குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
பங்களிப்பு
BRICS அமைப்பில் ஈரானின் பங்களிப்பு
2024-இல் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக இணைந்த ஈரான், தங்களின் மீதான மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள பிரிக்ஸ் அமைப்பை ஒரு முக்கியத் தளமாகப் பயன்படுத்தி வருகிறது.
'நியூ டெவலப்மென்ட் பேங்க்' அமைப்பில் இணைவதற்கும் ஈரான் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்தியா, ஒரே நேரத்தில் அமெரிக்கா, வளைகுடா நாடுகள், ரஷ்யா மற்றும் ஈரானுடன் நல்லுறவைப் பேணி வரும் வேளையில், ஈரானிய அதிபரின் இந்த டெல்லி வருகை இந்தியாவின் உலகளாவிய ராஜதந்திர நிலையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.