பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு
காலிஸ்தான் ஆதரவாளரும் பிரிவினைவாதத் தலைவருமான அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கான நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் தொடங்கி இருப்பதால், பஞ்சாபில் இணைய சேவைகள் நாளை(மார் 19) வரை நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிர சீக்கிய தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங் கடந்த சில வாரங்களாக பஞ்சாபில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் அம்ரித்பாலின் உதவியாளர் ஒருவரை விடுவிக்கக் கோரி அமிர்தசரஸ் புறநகரில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இன்று, அம்ரித்பாலின் ஆறு உதவியாளர்கள் ஜலந்தரில் கைது செய்யப்பட்டதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.
குடிமக்கள் பீதியடைய வேண்டாம்: பஞ்சாப் காவல்துறை
'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவர் அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் சிலர், போலீசார் தங்களை துரத்துவதாக கூறி சில வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அவர்கள் பகிர்ந்த ஒரு வீடியோவில் அமிரித்பால் ஒரு வாகனத்தின் மீது உட்கார்ந்திருப்பதை காண முடிந்தது. அப்போது ஒரு ஆதரவாளர் 'பாய் சாப்'-ஐ(அம்ரித்பால்) போலீஸ்காரர்கள் துரத்துகிறார்கள் என்று கூறுவதும் அந்த வீடியோவில் கேட்டது. பஞ்சாபில் நாளை வரை இணைய சேவைகள் முடக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க பஞ்சாப் காவல்துறை செயல்பட்டு வருகிறது. குடிமக்கள் பீதியடைய வேண்டாம். போலி செய்திகள் அல்லது வெறுப்பு பேச்சுகளை பரப்ப வேண்டாம்." என்று பஞ்சாப் காவல்துறை ட்விட்டரில் கேட்டு கொண்டது.