நிஜ வாழ்வு 'துரந்தர்' பிளாக் டைகரின் வீரமும் துரோகமும் -ஒரு கண்ணீர் வரலாறு!
செய்தி முன்னோட்டம்
சமீபகாலமாக 'துரந்தர்' போன்ற உளவு திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்,அந்த உளவாளி பாத்திரத்திற்கு உத்வேகமாகத் திகழ்ந்த இந்தியாவின் நிஜ உளவாளிகள் பலரின் சரித்திரம் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் RAW ஏஜென்ட் ரவீந்திர கௌஷிக் குறித்த தகவல்கள் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளன. 'பிளாக் டைகர்' என்று போற்றப்படும் இவரது வாழ்க்கை, சினிமா கற்பனைகளையும் மிஞ்சிய ஒரு தியாக காவியமாகும்.
ஆரம்ப காலம்
ஆரம்ப காலமும் பயிற்சியும்
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் 1952-ல் பிறந்த ரவீந்திர கௌஷிக், ஒரு சிறந்த நாடகக் கலைஞர். 1973-ல் லக்னோவில் நடைபெற்ற ஒரு நாடகப் போட்டியில் இவரது நடிப்புத் திறனைக் கண்டு வியந்த RAW அதிகாரிகள், இவரை உளவு பணிக்காக தேர்ந்தெடுத்தனர். இஸ்லாமிய இறையியல் மற்றும் உருது மொழியில் இரண்டு ஆண்டுகள் தீவிரப் பயிற்சி பெற்ற பிறகு, 'நபி அகமது ஷாகிர்' என்ற புதிய அடையாளத்துடன் அவர் பாகிஸ்தானுக்குள் அனுப்பப்பட்டார். தனது 23-வது வயதில் பாகிஸ்தான் சென்ற கௌஷிக், அங்குள்ள கராச்சி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்து, தனது திறமையால் 'மேஜர்' அந்தஸ்திற்கு உயர்ந்தார்.
ராணுவம்
பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜர் பதவி
1979 முதல் 1983 வரை பாகிஸ்தான் ராணுவத்தின் ரகசிய நகர்வுகள் மற்றும் அணுசக்தித் திட்டங்கள் குறித்த மிக முக்கியமான தகவல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இவரது அசாத்திய பணியை பாராட்டிய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இவருக்கு 'பிளாக் டைகர்' என்ற பட்டத்தைச் சூட்டினார். 1983-ல் இந்தியா அனுப்பிய மற்றொரு உளவாளி பிடிபட்டதால், கௌஷிக்கின் அடையாளம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு (ISI) தெரியவந்தது. இதையடுத்த கைது செய்யப்பட்ட அவர், 18 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறைகளில் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தார். சிறையிலிருந்து அவர் எழுதிய கடிதங்கள், நாட்டின் உயர்வுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு வீரனின் வேதனையை பறைசாற்றின. இறுதியில், 2001-ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு சிறையிலேயே அவரது உயிர் பிரிந்தது.