ஏடன் வளைகுடாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்ட வணிகக் கப்பலை மீட்ட இந்தியா கடற்படையினர்
ஏடன் வளைகுடாவில், மார்ஷல் தீவு கொடியுடன் கூடிய வணிக கப்பலின் பேரிடர் அழைப்பு கிடைத்தவுடன், இந்திய கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம், விரைந்து சென்று அவர்களை காப்பாற்றியுள்ளது. இனந்தெரியாத ஆளில்லா விமானம் தாக்கியதில் கப்பல் பழுதானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஎன்எஸ் விசாகப்பட்டினம், கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படையால், ஏடன் வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ளது. MV Genco Picardy இன் பேரிடர் அழைப்பிற்கு இணங்கி இந்திய கடற்படை கப்பல் உடனே சென்று கப்பலை மீட்டுள்ளது. இந்த எம்வி ஜென்கோ பிகார்டியில், 9 இந்திய மாலுமிகள் உட்பட 22 பணியாளர்கள் இருந்ததாகவும், உயிர்சேதம் எதுவும் பதிவாகவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கப்பலை போக்குவரத்துக்கு அனுமதித்தனர் இந்திய கடற்படையினர்.