தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்து காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல்
தமிழகத்தில் வேலை வாய்ப்பிற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளார்கள் என்னும் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள், கல்லூரி படிப்பினை முடித்து வெளியே வருபவர்களும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக தங்கள் விவரங்களை பதிவு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதனை அவர்கள் தொடர்ந்து புதுப்பித்தும் வருகிறார்கள். அதன்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பதிவுகளை புதுப்பிக்க வேண்டும். இந்த 3 ஆண்டுகள் முடிவடையும் தேதியினை தவற விடும் நபர்களுக்கு 2 மாதங்கள் சலுகை காலமும் வழங்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 67,55,466 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக தகவல்
இந்நிலையில் இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவாளர்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி, தமிழகத்தில் பள்ளி, கல்லூரி முடித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் , மாற்றுத்திறனாளிகள், காது கேளாதோர் என மொத்தம் 67 லட்சத்து 55 ஆயிரத்து 466 நபர்கள் பதிவு செய்து வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள் என்று வேலை வாய்ப்பு மற்றும் பதிவு துறை அறிவித்துள்ளது. தற்போது பெரும்பாலான அரசு பணிகள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.