ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் ஈர்ப்பு: பிரமோஸ் வாங்க ரூ.2,900 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்கிறது இந்தோனேசியா
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பிரமோஸ் ஏவுகணைகளின் துல்லியமான தாக்குதல் திறனைத் தொடர்ந்து, இந்தோனேசியா இந்த ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது. சுமார் $350 மில்லியன் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.2,900 கோடி) மதிப்பிலான இந்த ஒப்பந்தம், தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் பாதுகாப்பு செல்வாக்கை உயர்த்தியுள்ளது.
நம்பிக்கை
ஆபரேஷன் சிந்தூர் தந்த நம்பிக்கை
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பிரமோஸ் ஏவுகணைகள் முக்கியப் பங்காற்றின. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகள் மற்றும் முக்கியத் தளங்களை சுகோய்-30 விமானங்களில் இருந்து ஏவப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணைகள் மிகத் துல்லியமாக அழித்தன. இந்த நடவடிக்கையில் பிரம்மாஸின் வேகம் மற்றும் இலக்கை அழிக்கும் திறன் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக இந்தோனேசியா தனது கடல்சார் பாதுகாப்பிற்கு இது மிகச் சிறந்த ஆயுதம் என முடிவு செய்துள்ளது.
காரணங்கள்
இந்தோனேசியாவின் முடிவுக்கான காரணங்கள்
இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரிகோ ரிகார்டோ சிராட், இந்த ஒப்பந்தம் நாட்டின் ராணுவ நவீனமயமாக்கலின் ஒரு முக்கியப் பகுதி என்று தெரிவித்துள்ளார். கடல்சார் பாதுகாப்பு: உலகின் மிகவேகமான சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரமோஸ், இந்தோனேசியாவின் கடல் எல்லைகளைப் பாதுகாக்கவும், எதிரி கப்பல்களைத் தடுக்கவும் உதவும். பிலிப்பைன்ஸ் முன்மாதிரி: ஏற்கனவே பிலிப்பைன்ஸ் இந்த ஏவுகணைகளை வாங்கி வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருவது இந்தோனேசியாவிற்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.
ஆதிக்கம்
தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் ஆதிக்கம்
இந்தோனேசியாவுடன் மட்டுமின்றி, வியட்நாம் நாடும் பிரமோஸ் ஏவுகணைகளை வாங்குவது குறித்து இந்தியாவுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியின் பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.