5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம்
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் நாடுத்தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய 12 வகையான தடுப்பூசி மூலம் தடுக்கப்படக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த தடுப்பூசி தவணைகளை போட தவறியவர்களுக்காக கடந்த 2014ம்ஆண்டு முதல் இந்திர தனுஷ் 5.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில் இத்திட்டம் நடப்பாண்டில் 3 சுற்றுகளாக நடக்கவுள்ளது என்று இதனை சென்னையில் துவக்கி வைத்த மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தின் படி, விடுபட்ட மற்றும் தடுப்பூசி போட தவறிய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
தடுப்பூசி
முதல் சுற்று இம்மாதம் நடக்கும் நிலையில், அடுத்த சுற்று செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடக்கவுள்ளது
அதனை தொடர்ந்து அவர், "இதன் முதல்சுற்று ஆகஸ்ட் 7ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடக்கவுள்ளது, 2ம் சுற்று செப்டம்பர் 11 முதல் 16 வரையும், 3ம் சுற்று அக்டோபர் 9 முதல் 14 வரையும் நடைபெறும்" என்றும் தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் தட்டம்மை, நிமோனியா, FIPV-3ன் 3வது தவணை ஊசி, ரூபெல்லா உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இது குறித்த தெளிவான விவரங்களை யு-வின் என்னும் இந்திய அரசின் கணினி மென்பொருள் கொண்டு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என்று அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.