முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும்; பயணிகளுக்கு வருத்தம் தெரிவித்து இண்டிகோ நிறுவனம் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
தொடர்ச்சியாக நான்காவது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், பயணக் கட்டணம் ரத்து மற்றும் மறு அட்டவணைக்கான கட்டணத்தில் முழு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. டிசம்பர் 5 முதல் டிசம்பர் 15, 2025 வரை பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இண்டிகோ அறிவிப்பின்படி, ரத்து செய்யப்பட்ட பயணங்களுக்கான பணத்தைத் திரும்பப் பெற வாடிக்கையாளர்கள் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கத் தேவையில்லை. பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறை தானாகவே தொடங்கப்பட்டு, முன்பதிவு செய்யப்பட்ட அசல் கட்டண முறையில் செலுத்தப்படும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
அரசு
மத்திய அரசின் தலையீடு
இந்த வாரத்தில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹைதராபாத், சென்னை, அகமதாபாத் மற்றும் பிற பெரிய விமான நிலையங்களில் இந்தச் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் பயணிகளின் காத்திருப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் முடிவுக்கு வரும் என்றும், இயல்பு நிலை திரும்பும் என்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கின்ஜராபு உறுதியளித்துள்ளார். இந்தக் குழப்பத்திற்கான காரணங்களை ஆராய்ந்து, பொறுப்பானவர்களைக் கண்டறிய ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் முன்னுரிமை இயல்பு நிலையை மீட்டெடுப்பதே என்றும், இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாட்டுத் தாமதங்கள் மற்றும் ரத்துகள் குறித்து அரசு ஆழ்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.