நடுவானில் திடீர் திருப்பம்! டெல்லியிலிருந்து கிளம்பிய இண்டிகோ விமானம் 7 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியது ஏன்?
செய்தி முன்னோட்டம்
டெல்லியிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம், சுமார் 7 மணி நேரம் பறந்த நிலையில், ஈரான் போர் சூழல் காரணமாகப் பாதி வழியில் மீண்டும் டெல்லிக்கே திரும்பியுள்ளது. இண்டிகோ நிறுவனத்திற்காக நார்ஸ் நிறுவனம் இயக்கிய 6E33 என்ற விமானம், திங்கட்கிழமை (மார்ச் 9) அதிகாலை டெல்லியிலிருந்து புறப்பட்டது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தைத் தவிர்க்க, இந்த விமானம் வழக்கமான பாதையைத் தவிர்த்து, ஏடன் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதி வழியாகச் சென்றது. சுமார் 7 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, எத்தியோப்பியா - எரித்திரியா எல்லைக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீர் வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் விமானம் மீண்டும் டெல்லிக்குத் திருப்பப்பட்டது.
விளக்கம்
காரணமும் அதிகாரப்பூர்வ விளக்கமும்
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வான்வெளியில் கடைசி நிமிடக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "மத்திய கிழக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக, சில விமானங்கள் நீண்ட பாதைகளை எடுக்க வேண்டியுள்ளது அல்லது திருப்பி விடப்படுகின்றன. 6E33 விமானம் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக மீண்டும் டெல்லிக்குத் திருப்பப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கிறோம்." என இண்டிகோ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பாதிப்புகள்
பின்னணி மற்றும் பாதிப்புகள்
பிப்ரவரி 26க்குப் பிறகு டெல்லி - மான்செஸ்டர் இடையே இயக்கப்படும் முதல் இண்டிகோ விமானம் இதுவாகும். சாதாரணமாக 11 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் இந்தப் பயணம், யு-டர்ன் காரணமாக மொத்தம் 14 மணி நேரம் நீடித்து மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே முடிந்தது. போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை மட்டும் இண்டிகோ சுமார் 500 சர்வதேச விமானங்களை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.