LOADING...
இந்திய விமானப்படையின் 'விண்ணின் கண்': முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான நேத்ரா அவாக்ஸிற்கு இறுதி செயல்பாட்டு அனுமதி கிடைத்தது
முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான நேத்ரா அவாக்ஸிற்கு இறுதி செயல்பாட்டு அனுமதி கிடைத்தது

இந்திய விமானப்படையின் 'விண்ணின் கண்': முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான நேத்ரா அவாக்ஸிற்கு இறுதி செயல்பாட்டு அனுமதி கிடைத்தது

எழுதியவர் Sekar Chinnappan
Jun 25, 2026
07:09 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் வான் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், எதிரி நாடுகளின் நடமாட்டங்களை வான்வெளியில் இருந்தபடியே துல்லியமாகக் கண்காணிப்பதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கும் உள்நாட்டுத் தயாரிப்பான நேத்ரா அவாக்ஸ் (Netra AEW&C) விமானம், தனது இறுதி செயல்பாட்டு அனுமதியை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது. பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) வான்வழி அமைப்புகளுக்கான மையத்தில் நடைபெற்ற விழாவில், இந்திய விமானப்படையின் துணைத் தளபதி ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆரம்பகட்ட அனுமதிகளைக் கடந்து, தற்பொழுது இந்த சான்றிதழ் கிடைத்துள்ளதன் மூலம், நேத்ரா விமானம் இனி எவ்விதப் போர்க் காலச் சூழலிலும் முழு உத்திசார் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தத் தகுதியானது எனத் தகுதிபெற்றுள்ளது.

விண்ணின் கண்

இந்தியாவின் 'விண்ணின் கண்' என்று அழைக்கப்படக் காரணம் என்ன?

நவீன வான்வழிப் போர்களில் எதிரிகளின் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிவது மிக அவசியமான ஒன்று என்பதால், நேத்ரா விமானம் இந்தியாவின் "விண்ணின் கண்" என்று ராணுவ வட்டாரங்களால் அழைக்கப்படுகிறது. இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநெருக்கமான ரேடார்கள் மற்றும் சென்சார்கள், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் பறந்து வரும் எதிரி நாட்டுப் போர்க் விமானங்கள், ஏவுகணைகள், ஆளின்லா ட்ரோன்கள் மற்றும் கடல்வழி அச்சுறுத்தல்களைக் கூட நொடிப் பொழுதில் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கொண்டவை ஆகும். வான்வெளியில் இருந்து சேகரிக்கப்படும் இந்தத் துல்லியமான விபரங்களை, எல்லையில் பறக்கும் இந்தியப் போர் விமானங்களுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையங்களுக்கும் உடனுக்குடன் அனுப்பி, போரின் போது மிக வேகமான மற்றும் சரியான முடிவுகளை எடுக்க இது பெரிதும் உதவுகிறது.

பிரேசில் விமானம்

பிரேசில் நாட்டின் எம்பிரேயர் விமானத்தில் இந்தியத் தொழில்நுட்பம்

பிரேசில் நாட்டின் அதிநவீன எம்பிரேயர் விமானக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு, அதன் மேல் பகுதியில் முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பிரத்யேக கண்காணிப்பு சென்சார்கள் மற்றும் ரேடார் அமைப்புகள் பொருத்தப்பட்டு இந்த நேத்ரா அவாக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இத்தகைய வான்வழி ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளுக்கு இந்தியா முழுமையாக வெளிநாட்டு ரேடார் தொழில்நுட்பங்களையே நம்பி இருந்த நிலையில், தற்பொழுது இந்தத் தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டிலேயே ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. சவால்கள் நிறைந்த இந்தத் தொழில்நுட்பப் பயணத்தில் இந்திய விமானப்படையையும் விஞ்ஞானிகளும் இணைந்து புதிய கண்டுபிடிப்புகள் மூலம் இந்த இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளதாக ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

பாலக்கோட் வான்வழி தாக்குதல்

பாலக்கோட் வான்வழித் தாக்குதலில் திறனை நிரூபித்த நேத்ரா

இந்திய விமானப்படையின் நெட்வொர்க் சார்ந்த போர் உத்திகளை பலமடங்கு வலுவாக்கியுள்ள இந்த நேத்ரா அவாக்ஸ் சிஸ்டம், ஏற்கனவே இந்தியாவின் மிக முக்கிய ராணுவ நடவடிக்கைகளில் தனது திறனை நிரூபித்துக் காட்டியுள்ளது. குறிப்பாக, எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்த பாலக்கோட் வான்வழித் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றின் போது எதிரிகளின் ரேடார்களை முடக்கி, நமது போர் விமானங்களுக்குப் பாதுகாப்பு வளையமாக செயல்பட்டு நேத்ரா தனது திறமையை வெளிப்படுத்தியது. தற்பொழுது இதற்கு இறுதி செயல்பாட்டு அங்கீகாரம் கிடைத்துள்ளதன் மூலம், இந்திய வான் எல்லைகளின் பாதுகாப்பு அரண் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement