இந்திய படைகள் மாலத்தீவுகளை விட்டு வெளியேற வேண்டும்: அதிபர் முகமது முய்ஸோ அறிவிப்பு
மாலத்தீவுகள் முழு சுதந்திரத்துடன் இயங்குவதற்காக அங்கு நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகள் வெளியேற்றப்படுவார்கள் என அதிபராக தேர்வாகியுள்ள முகமது முய்ஸோ தெரிவித்துள்ளார். முன்னாள் மாலத்தீவு அதிபர் ஆன இப்ராஹிம் சோலிஹ் இந்தியாவிற்கு துணை போகிறார் என, முகமது முய்ஸோ தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் மாலத்தீவுகளில் வேற எந்த நாட்டு ராணுவம் இருந்தாலும், அவையும் இது போலவே வெளியேற்றப்படும் என, ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முகமது முய்ஸோ தெரிவித்திருந்தார். மேலும் அவர், இந்திய ராணுவ வெளியேற்றத்திற்கான பேச்சு வார்த்தைகளை ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், அவை வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
மாலத்தீவில் 70 இந்திய வீரர்கள் உள்ளனர்
இந்தியா படைகளை வெளியேற கூறுவது, "சீனா அல்லது வேறு எந்த நாட்டின் இராணுவப் படைகளையும், நான் இங்கு அனுமதிக்க போகிறேன் என்ற அர்த்தம் ஆகாது" என கூறியுள்ளார். அதேசமயம் அவர் "அனைத்து நாடுகளிடமிருந்தும் உதவி மற்றும் ஒத்துழைப்பை விரும்புவதாக" தெரிவித்தார். மாலத்தீவுகளில் தற்போது 70 இந்திய படை வீரர்கள் உள்ளனர். அவர்கள் இந்தியாவின் நிதி உதவியில் வழங்கப்பட்ட ரேடார் மற்றும் கண்காணிப்பு விமானங்களை பராமரித்து வருகின்றனர். மேலும் இந்திய கடற்படை கப்பல்கள், மாலத்தீவுகளின் சிறப்பு பொருளாதார மண்டலத்தை ரோந்து சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது. சீன ஆதரவு முகமது முய்ஸோ, மாலத்தீவுகள் அதிபராக வென்று இருப்பது, இந்திய துணை கண்ட பகுதிகளில், இந்தியாவின் பிடியை தளர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.