ரத்து செய்யப்படும் காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளின் மூலம் இந்திய ரயில்வேக்கு ரூ.1,229 கோடி வருவாய்
2021-2024 ஆண்டுகளுக்கு இடையே(ஜனவரி வரை) ரத்து செய்யப்பட்ட காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளின் மூலம் இந்திய ரயில்வே ரூ.1,229.85 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்வலர் விவேக் பாண்டே என்பவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை(ஆர்டிஐ) கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ரயில்வே அமைச்சகத்தின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி வாரத்தில், அதாவது நவம்பர் 5 முதல் நவம்பர் 17 வரை, இந்திய இரயில்வேயில் 9.618 மில்லியன் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட்களை ரத்து செய்வதற்கான விதிகள்
அந்தக் காலக்கட்டத்தில், காத்திருப்புப் பட்டியலின் இறுதி நிலையை ரத்து செய்த பயணிகளின் மூலம் மட்டுமே இந்திய ரயில்வேக்கு ரூ.10.37 கோடி வருவாய் கிடைத்துள்ளது. புறப்படும் நேரம் மற்றும் வகுப்பு ஆகியவற்றை பொறுத்து ரத்து கட்டணங்கள் மாறுபடும். எடுத்துக்காட்டாக, புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் உறுதிசெய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்வதால், அதற்கு ரூ.60 நிலையான கட்டணமாக விதிக்கப்படும். அதேசமயம், ஏசி வகுப்புகளுக்கான கட்டணம் ரூ. 120 முதல் ரூ.240 வரை இருக்கும். இந்திய ரயில்வேயின் ரீஃபண்ட் விதிகளின்படி, முழுப் பணத்தைத் திரும்பப் பெற, ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் அந்த டிக்கெட் ரத்து செய்யப்பட வேண்டும்.