Loading...
நாடாளுமன்றம் முடங்குவதால் மக்களுக்கு ஏற்படும் நிதி இழப்பு: முழு கணக்கு விவரம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து இரண்டாவது நாளாக முடங்கியுள்ளன

நாடாளுமன்றம் முடங்குவதால் மக்களுக்கு ஏற்படும் நிதி இழப்பு: முழு கணக்கு விவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 21, 2026
08:49 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நீட் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து இரண்டாவது நாளாக முடங்கியுள்ளன. அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளால் அவைகள் ஒத்திவைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், இதனால் நாட்டின் வரிப்பணம் எந்த அளவுக்கு வீணாகிறது என்ற பொருளாதார கணக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செலவு

நாடாளுமன்றத்தை நடத்த ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு செலவாகிறது?

நாடாளுமன்றத்தை இயக்குவதற்கான செலவுகள் குறித்த புள்ளிவிவரங்களின்படி, ஒரு நிமிடத்திற்குச் சுமார் ₹2.5 லட்சம் செலவாகிறது.

இந்தத் தகவலை முதன்முதலில் 2012-ஆம் ஆண்டு அன்றைய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பின்னர் 2023-ல் முன்னாள் மக்களவைச் செயலாளர் பி.டி.டி. ஆச்சார்யா இந்த மதிப்பீட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அமளி காரணமாக சபை செயல்படாவிட்டாலும் இந்த நிதியிழப்பு தடையின்றி தொடர்கிறது.

ஒரு நிமிடத்திற்கு- ₹2.5 லட்சம்

ஒரு மணி நேரத்திற்கு- ₹1.5 கோடி

ஒரு நாளைக்கு (6 மணி நேர அமர்வு)- ₹9 கோடி

ஒரு கூட்டத்தொடருக்கு (15-20 நாட்கள்)- ₹135 கோடி - ₹180 கோடி+

அடக்கம்

இந்தச் செலவில் எவையெல்லாம் அடங்கும்?

நாடாளுமன்றக் கட்டிடப் பராமரிப்பு, மின்சாரம், குடிநீர், பாதுகாப்பு அம்சங்கள், எம்பிக்களின் சம்பளம் மற்றும் படிகள், ஊழியர்களின் ஊதியம், போக்குவரத்து மற்றும் உணவகம் உள்ளிட்ட அனைத்து நேரடி மற்றும் மறைமுகச் செலவுகளும் இதில் அடங்கும்.

சபை விவாதங்கள் எதுவுமின்றி ஒத்திவைக்கப்பட்டாலும், உள்கட்டமைப்பு மற்றும் ஊழியர்களுக்கான செலவுகள் குறைந்தபாடில்லை. ஒரு நாள் முடங்கினால் ₹9 கோடி மக்கள் பணம் வீணாகிறது.

கேள்வி நேரம் முடங்குவதால், அமைச்சர்களிடம் பொதுமக்கள் சார்ந்த கேள்விகளை கேட்டு பதில்களை பெற முடியாமல் போகிறது.

ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை 25 நாட்களில் 19 அமர்வுகளாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், தொடர் முடக்கங்கள் நீடித்தால் நூற்றுக்கணக்கான கோடிகளில் மக்கள் பணம் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT